தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, உள்ளிக்கோட்டை நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், மேலத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, தேவர்கண்டநல்லூர், விலமல், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கன மழையில் பயிர்கள் மூழ்கியதால் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் சுற்றுச் சுவரில் 100 அடி நீளம் இடிந்து விழுந்த நிலையில், மேலும் 300 அடி நீளச் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழலில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, தேவூர், கானூர், திருக்குவளை, திட்டச்சேரி, திருமருகல், திருப்பூண்டி, கீவளூர், கீழையூர், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி செய்துள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்குவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறாவது நாளாக கனமழை பெய்டு வருகிறது. காலை 6 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 63.48 மில்லிமீட்டர் மழை பதிவானது. சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்கிறது. மேட்டூரில் திறக்கபட்ட தண்ணீர் காலம் கடந்து வந்து சேர்ந்ததால் அனைத்து கிளை வாய்க்கால்கள் மற்றும் ஆறுகாளில் முழு அளவு தண்ணீர் இருப்பதால் விளைநிலங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதே போல் வடிகால் ஆறுகளில் புதர் மண்டி கிடப்பதாலும் தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக சீர்காழியை அடுத்த பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய், வாணகிரி, முதல் தரங்கம்பாடி வரையிலான 26 கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 750 விசை படகுகள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தபட்டுள்ளன.