0 0
Read Time:6 Minute, 18 Second

சமீபத்தில் அன்னதானம் போடாமல் விரட்டப்பட்டு உரிமை பேசிய நரிக்குறவ சமுதாய பெண் அஸ்வினி சமூக வலைதளங்களில் வைரலானார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார். இந்நிலையில் அஸ்வினி வசிக்கும் பகுதிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். ஐயா நீங்களா? என் வீட்டுக்குள்ளா? என அஸ்வினி நெகிழ்ந்துப்போய் நன்றி சொன்னார்.

அன்னத்தானத்தில் விரட்டப்பட்ட அஸ்வினி

நரிக்குறவ சமுதாய மக்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவதும், அவர்களை எச்சில் இலை பொறுக்குபவர்களாகவும் சித்தரிப்பதும், இயல்பு வாழ்க்கையில் நடத்துவதும் சமீப காலம் வரை வாடிக்கையான ஒன்றாக இருந்தது. ஆனால் காலம் மாறி வருகிறது. சுய தொழில் செய்து பிழைப்பதும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சென்று பிழைப்பது, பிள்ளைகளை படிக்க வைப்பது என அவர்கள் வாழ்க்கை நிலை மாறி விட்டது.

டால்டா டின் காலம் மாறிப்போச்சு

டால்டா டின்னுடன் சித்தரித்த காலம் மாறிப்போனது, ஆனாலும் மாறாத அதிகார மனம் கொண்டோர் உள்ளதால் சில இடங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படும் நிகழ்வும் நடக்கத்தான் செய்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்தான் அஸ்வினி. நரிக்குறவர் சமுதாய பெண்ணான இவர் பாசிமணி, சிறு விளையாட்டுப்பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். பிழைப்பு இல்லாத நாட்களில் கோயிலில் அரசு அளிக்கும் அன்னதானத்தை சாப்பிடுவது வழக்கம்.

அன்றும் இதேப்போன்று அன்னதானம் சாப்பிட பந்தியில் அமர்ந்த அஸ்வினி உள்ளிட்டோர் அங்கிருந்த அதிகாரிகளால் விரட்டப்பட்டனர். இதனால் அவமானமடைந்த அஸ்வினி தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டி வைரலானது, அரசாங்கம் அளிக்கும் அன்னதானத்தை விட்டு விரட்ட நீங்கள் யார், உங்கள் வீட்டு கல்யாணமா? சுத்தம் இல்லை என்று எங்களை விரட்டிய காலம் எல்லாம் போச்சு இப்ப நாங்க 3 வேளை குளிக்கிறோம் சுத்தமாக இருக்கிறோம்.

எங்களை ஒதுக்க நீங்கள் யார், கல்வி அறிவு இல்லை என்றுத்தானே ஒதுக்குகிறீர்கள், எங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் நாளை அவர்கள் உங்களை கேள்வி கேட்பார்கள் என அவரது வார்த்தைகள் குத்தீட்டியாக அனைவரையும் துளைத்தது. உரிமைக்கு குரல் கொடுத்த அஸ்வினிப்பற்றி அறிந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அஸ்வினியை அழைத்து அவருடனும், அவரது உறவினர்களுடன் சமபந்தி விருந்துண்டார்.

அவர்களது மனுக்களை வாங்கினார், கோரிக்கையை முதல்வரிடம் கொண்டுச் செல்வதாக தெரிவித்தார். அதேபோல் அவர்களது கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. உடனடியாக அவர்களது கோரிக்கையான வீட்டுமனை பட்டா, வாழ்வாதார உதவிகளை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டார்.

நரிக்குறவ, இருளர் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய முதல்வர்

தீபாவளி அன்று அவர்களுடன் பண்டிகையை கொண்டாட முடிவெடுத்த ஸ்டாலின் அவர்கள் வசிக்கும் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரிக்கு சென்றார். அங்கு வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஐயா என்வீட்டுக்கு முதல்வரான நீங்களா நெகிழ்ந்த அஸ்வினி

பின்னர் அந்த புரட்சிப்பெண் அஸ்வினி வீடு எது எனக்கேட்டார் முதல்வர், அஸ்வினியிடம் உன் வீட்டைக்காட்டு எனக்கூறிய முதல்வர் அவருடன் அஸ்வினி வீட்டுக்குச் சென்றார். முதல்வர் வருவதை அறிந்து அஸ்வினி நெகிழ்ந்து போனார். வீட்டுக்குள் வந்த முதல்வர் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். ஐயா நீங்கள் எங்கள் வீட்டுக்கா என மனம் நெகிழ்ந்து கேட்டார் அஸ்வினி. ஒன்றும் பிரச்சினை இல்லை நலமா இருக்கிறாயா என்று ஸ்டாலின் கேட்டார்.

இவரும் எம்ஜிஆர் போல பாத்துக்கிறாரு நெகிழ்ந்த இருளர் மக்கள்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முதல்வரின் இந்தச்செயலால் நரிக்குறவ, இருளர் இன மக்கள் நெகிழ்ந்துப்போயினர். முன்னாடி எம்ஜிஆர் ஐயா இருந்தாரு எங்கள நல்லா பார்த்துக்கிட்டாரு, இப்ப ஐயா எங்க குறைய கேட்டு நிவர்த்தி செஞ்சாரு இவரும் எம்ஜிஆர் போலத்தான் இருக்காரு என வாழ்த்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %