சிதம்பரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் அட்சயா (வயது 15). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணி மகள் அனுஸ்ரீ(18) திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ், மணி ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டை கடற்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராட்சத அலை எழுந்தது.
இதில் சிக்கிய அட்சயா, அனுஸ்ரீ ஆகியோரை அலைகள் இழுத்துச் சென்றன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது குடும்பத்தினர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்ட அங்கிருந்தவர்கள், மாணவிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடலில் மூழ்கிய மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கடலில் மூழ்கிய அட்சயாவை பிணமாக மீட்டனர். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அனுஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம் இதேபோல் சேத்தியாத்தோப்பு அடுத்த அகர சோழத்தரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள்கள் சித்ரா (16), விசித்ரா (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விசித்ரா 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்தினர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கீதா ஆகியோருடன் நேற்று சிதம்பரம் அருகே கொடியம்பாளையத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு சித்ரா, விசித்ரா, கீதா ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, ராட்சத அலையில் சிக்கினர்.
இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள் சித்ரா, கீதா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடலில் மூழ்கிய விசித்ரா பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Read Time:3 Minute, 46 Second