0 0
Read Time:4 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தின் மூலம் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் தினந்தோறும் 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அனைத்து விசைப்படகுகளும் பழையாறு துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு படகு அணையும் தளம் மணல் மேடாகி உள்ளதால் வழக்கம் போல அந்த இடத்தில் சில படகுகளை மட்டும் மீனவர்கள் நிறுத்தி விட்டு மற்ற படகுகளை சற்று தூரத்தில் நிறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நள்ளிரவு முதல் தொடர்ந்து காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வேகமாக வீசிய காற்றின் வேகத்தில் தண்ணீர் வேகமாக அலையாக எழும்பியது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோத ஆரம்பித்தது. இதில் பழையாறு சுனாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்(60) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு உடைந்து நொறுங்கியது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இன்று காலை உடைந்த படகை மற்ற படகுகளின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து வந்து சேர்த்துள்ளனர். இந்தப் படகின் மதிப்பு ரூ. 40 லட்சம் என்றும்,பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் தெரிவித்தார். 

இதுகுறித்து அப்பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் கூறுகையில், பழையாறு படகு அணையும் தளம் தற்போது மணல் மேடாகி உள்ளதால் ஒரு ஆண்டு காலமாக அந்த இடத்தில் விசைப் படகுகளை நிறுத்த முடியவில்லை. இதனால் சற்று தொலைவில் படகுகளை நிறுத்தி விடுகிறோம். துறைமுகத்தில் இருந்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால் படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் படகுகள் எளிதில் காற்று வீசும்போது ஒன்றோடொன்று மோதி உடைகின்றன.

படகு நிறுத்துமிடத்தில் (படகு அணையும் தளம்) விசைப்படகுகள் நிறுத்தப்படுவதன் மூலம் பலத்த காற்று வீசிய போதும் கூட படகுகள் பெரும்பாலும் உடைவது தவிர்க்கப்படும். வழக்கம்போல படகு நிறுத்துமிடம் மண் மேடாகி உள்ளதால் இங்கு படகுகளை நிறுத்த முடியாமல் தூரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசும்போது  படகுகள் எளிதில் ஒன்றோடொன்று மோதி உடைகின்றன. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, மண்மேடாக உள்ள பகுதிகளை உடனடியாக மீண்டும் ஆழப்படுத்தி வழக்கம் போல படகுகளை நிறுத்துவதற்கு ஏதுவான வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடைந்த விசைப்படகு உரிமையாளருக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %