சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளுக்குள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர். இந்நிலையில் சிதம்பரம், கிள்ளை, பிச்சாவரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிக கனமழை பெய்துவருவதால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படகு சவாரி திங்கள்கிழமை (இன்று) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் நீரின் மட்டம் உயர்ந்துகொண்டே இருப்பதால் தற்காலிகமாக படகு இல்லம் இயங்காது என சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. வனத்துறையின் அறிவுறுத்தலின்படி சுற்றுலாத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.