மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது.
இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி 1ம்தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் பத்துநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்சமூர்த்திகள் ஆலயத்தில் இருந்து காவிரிக்கு சென்று தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது நான்குரதவீதிகளை வலம் வந்தது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் வெள்ளிபடிசட்டத்திலும், சுப்ரமணியர் பூதவாகனத்திலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு வீதியுலா சென்றது. நான்கு ரதவீதிகளில் நடைபெற்ற வீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர்.