மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் இயல்பான மழையைவிட தற்போது 51 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஏரிகளை பொறுத்தவரை இரண்டு ஏரிகள் உள்ளது. பெருத்தோட்டம் மற்றும் திருவாளி ஆகிய இரண்டு ஏரிகளுமே முழு கொள்ளளவை ஏட்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் 2012 குளங்கள் உள்ளன. அதில் 905 குளங்களில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. 300க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதிகமான மழை பெய்வதால் கூடிய விரைவில் அனைத்து குளங்களும் நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 9,10,11 ஆகிய நாட்களில் மிக கன மழை பெய்யகூடிய வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்கவும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேநேரத்தில் பாதுகாப்பாக இருக்கவும். மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் அட்டை, பத்திர பதிவு தாள்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தை பொறுத்தவரை கடல் முகத்துவாரங்கள் 10 எண்ணிக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் தூர்வாரப்பட்டு, தண்ணீர் விரைவாக செல்லவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 202 கிராமங்கள் ஏதாவது ஒரு வகையில் மழையினால் பாதிக்கப்பட்டவைகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளளோம். கிராம நிர்வாக அலுவலர்களை அவர்களுக்குரிய கிராமங்களில் தங்குவதற்கு உத்தரவிட்டுள்ளோம். ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியரை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளோம். ஒவ்வொரு பிர்காவிற்கும் 3 குழுக்கள் வீதம் 15 குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் 4 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்கள், புயல் 11 பாதுகாப்பு மையங்கள், 350 பள்ளிகளை பாதுகாப்பு மையங்களாக தேர்வு செய்து, தயார் நிலையில் உள்ளது. அனைத்து இடங்களிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிசியை பொறுத்தவரை 450 டன் தயார் நிலையில் உள்ளது.
மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 09.11.2021-க்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பெய்த மழையினால் 8 மாடுகள் உட்பட 24 கால்நடைகள் இறப்பும், வீடுகளை பொறுத்தவரை பகுதிகளாகவும், முழுமையாகவும் 56 வீடுகள் சேதமடைந்ததாக பதிவாகி உள்ளது. இதற்குரிய நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பா, தாளடியில் இதுவரை 67 ஆயிரம் ஹெக்டேர் நடவு பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது பருவமழை காரணமாக 300 ஹெக்டேர் பயிரில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
மின்சாரவாரியத்தை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வருட காலமாக 750 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 450 இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் 3700 பேரிடர்கால முதல்நிலை காப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 11 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை சுழற்சி முறையில் அலுவலர்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் குறித்தான புகார்களை இலவச தொலைபேசி எண் 04364-1077, 04364-222588 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகாரின்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 164 ஜேசிபி இயந்திரங்கள் மழைநீரை வெளியேற்ற 80 பம்புசெட்கள், 175 ஜெனரேட்டர், 140 மரம் அறுக்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. கரை உடைப்பை சரி செய்ய 1 லட்சம் சாக்குகளும், 35 ஆயிரம் மணல் மூட்டைகளும். 400 யூனிட் மணல் தயார் நிலையில் உள்ளது. எனவே மக்கள் அச்சப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.