தமிழ்நாட்டில் பரவலாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், நேற்று (08.11.2021) பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதீத கனமழை பொழியும் என்பதால் நாளையும், நாளை மறுநாளும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 11ஆம் தேதி வடதமிழ்நாட்டை வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிகக் கனமழை பொழியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 11ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவித்துள்ளது.