தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.37 அடி நீர் நிரம்பியது. வைகை அணை திறப்பு. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,151 கன அடி நீர் வெளியேற்றம்.
மேலும் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. ஒரே வருடத்தில் வைகை அணை மூன்று முறை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 2,500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், சிறிய ஏழு மதகுகள் வழியாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ,ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.