கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10, 11 ஆகிய தேதிகளில் மிக கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 முக்கிய நீர் தேக்கங்களிலும் நீரின் அளவானது பாதுகாப்பான அளவில் தான் உள்ளது, அதுமட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் உள்ள 218 ஏரிகளில் 75 ஏரிகள் முழு கொள்ளளவை அடைந்துவிட்டன அதனின் கரை பகுதிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். குறிஞ்சிப்பாடிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி ஆனது 16 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். தமிழக அரசு கடலூர் சிப்காட்டில் புதிதாக அமைந்து வரும் 3000 கோடி ரூபாய் திட்டமான நாகார்ஜுனா ரிபைனரீஸ் என்ற ஆந்திரா நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்த ஏரியில் ராட்சச ஆழ் குழாய் மூலமும் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக அனைத்து ஆறு மற்றும் ஏரிகளிலும் தண்ணீர் வரத்து அதிரித்து வரும் காரணத்தினால் பெருமாள் ஏரி தனது முழு கொள்ளளவான 6.5 அடியை எட்டி உள்ளது, மேலும் அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் பெருமாள் ஏரியை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏறிய சுற்றி உள்ள ஆலப்பாக்கம் – கீழ்பூவாணிகுப்பம், மேட்டுபாளையம், சிறுபாலையூர், பெத்தாங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ள நீர் ஓடுவதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.