கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதியில் பெய்யும் மழைநீர் வெள்ளமாக கரைபுரண்டு காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு வருகிறது. அப்படி வரும் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருவதால், காட்டுமன்னார்கோவிலில் இருந்து வீரனந்தபுரம், கண்டமங்கலம் வழியாக கும்பகோணம், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வீரனந்தபுரம் என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டு புதன்கிழமையன்று போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மடப்புரம், வீரனந்தபுரம், கண்ணடிபுட்டை, வீரணாநல்லூர் உள்ளிட்ட 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பேருந்துகள் பாப்பாகுடி வழியாக 5 கி.மீ தூரம் சுற்றி செல்கிறது. மேலும், இந்த கிராம பகுதியில் உள்ள 500 ஏக்கருக்கும் மேல் உள்ள நெற்பயிர் வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளநீரை விரைவில் வடிய வைத்து சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுபணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.