கடலூர் ஒவ்வொரு ஆண்டும் மழை. வெள்ளம் பேரிடர் என பாதிப்புக்குள்ளாகிற மாவட்டங்களில் ஒன்று. விழுப்புரம். திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றின் வழியாக மழை நீர் வெளியேறி கடலூரில் கடலில் கலக்கிறது. இதனால் கடலூர் மாவட்டம் வடிகால் மாவட்டமாக உள்ளது, வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த ஆறு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து அதன் விளைவாக தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்தது.
ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடலூர் நகராட்சி மூலம் 45 வார்டுகளிலும் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக பெருமழை பெய்தும், பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் தற்போது பெய்த கன மழையினால் கடலூர் மாநகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், சுற்றுலா மாளிகை, தீயணைப்பு நிலையம், சார் ஆட்சியர் அலுவலகம் என பல அரசு அலுவலகங்களில் மழைநீர் குளம் போல காட்சி அளிக்கிறது.
வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கிய நீரை வெளியேற்ற வேண்டிய மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கியுள்ள நீரை அகற்ற முடியாமல் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது. நகராட்சி ஆணையர் விடுப்பில் செல்ல விடுபட்டுப்போன பணிகளால் அரசு அலுவலகங்களுக்கு வரும் அலுவலர்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தேங்கிய மழைநீரில் தொற்று நோயகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் நகர பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேங்கியுள்ள நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவ்வலுலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.