0 0
Read Time:4 Minute, 32 Second

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ஜெய் பீம் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக் கொண்டு எடுக்கப்பட்டது. பழங்குடியின, இருளர் மக்களின் இன்னல்களை மிகவும் தத்ரூபமாக காட்டியுள்ள அப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், ஜெய் பீம் படத்துக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த ராஜாக் கண்ணுவின் மனைவி பார்வதி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், அந்த வட்டித் தொகையை அவர் பெறும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும் எனவும் நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப் பெற்றேன். ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப்படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே. சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

மேலும் குறவர் சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்துக்கு நிரந்தர தீர்வு. ஆகவேதான் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம்.

மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %