கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதன்தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொளளவுள்ளார்.
இதனையடுத்து முதலமைச்சரின் பயண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“காலை 8மணிக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார். காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு சென்றடையும் முதலமைச்சர், பின்னர் தரைமார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார். காலை 9.40 மணிக்கு, திருநெல்வேலி பணகுடி பகுதியில் மழை பாதிப்பு தொடர்பாக பார்வையிடுகிறார்.
காலை 10 மணிக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடுகிறார். காலை 11.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார். நண்பகல் 12.40 மணிக்கு மனவாளகுறிச்சி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை பார்வையிடுகிறார். பிற்பகல் 1.30மணிக்கு, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தும் அவர், மாலை 3 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.”