தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், மற்றும் இதர நீர் நிலைகள் அனைத்தும் தொடர்ந்து வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆறுகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நேற்று விடுமுறை தினம் என்பதால் மதியம் அழகியநத்தம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தனர். அப்போது முள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவரின் மகன் லோகேஸ்வரன் (16) என்ற 11 ஆம் வகுப்பு மாணவர் திடீரென ஆற்றில் மூழ்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் (20) என்பவர் லோகேஸ்வரனை காப்பாற்ற சென்றார். எதிர்பாராதவிதமாக காப்பாற்ற சென்ற மாதவனும் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் இவரை காப்பாற்ற முயன்ற அவருடைய சகோதரி மாளவிகாவும் (20) தண்ணீரில் மூழ்கினார். இதை அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் படகு மூலம் சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரையும் தேடினர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லோகேஸ்வரன், மாளவிகா ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதை பார்த்து அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்டோர் 2 படகுகள் மூலம் மாதவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணி வரை வரை நடைபெற்ற தேடுதல் பணி பலன் அளிக்கவில்லை, மாதவனை மீட்க முடியாத நிலையில் கரை திரும்பினார்.
ஆற்றில் மூழ்கிய மாதவனும், மாளவிகாவும் இரட்டையர்கள் என்பது மேலும் அந்த கிராம மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. பள்ளி மாணவர் உள்பட 2 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் சென்று சென்று குளிப்பதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும் தீயணைப்பு துறையினர் கேட்டுக்கொண்டனர்.