வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்டா மாவட்டங்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இருவரும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.