புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தகப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஏற்பாட்டில் இரு கிராமங்களுக்கு இடையே காட்ட ஆற்றின் குறுக்கே ஒரு வாரத்திற்குள் இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தகப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள நவக்கொல்லைப்பட்டிக்கு செல்ல வேண்டுமானால் குறுக்கே ஓடும் காட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். காட்டாற்றின் குறுக்கே பொதுமக்கள் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வதற்கு போடப்பட்ட 2 சிமெண்ட் குழாய் கொண்ட பாலம் தற்போதைய மழையில் பழுதடைந்து விட்டது. இதனால் இரு கிராமங்களும் துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
உடனடியாக அதிக சிமெண்ட் குழாய்களைக் கொண்ட தரை பாலத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 10ஆம் தேதி மேற்படி பகுதியைப் பார்வையிட்ட எம்எல்ஏ அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து தரைப்பாலம் அமைக்கும் பணி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்த ஒருவாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டதை கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
இந்நிலையில், பாலம் அமைக்கும் பணியை திங்கட்கிழமையன்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பார்வையிடு ஆய்வு செய்தார். அவருடன் வட்டாட்சியர் புவியரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ராமையன், ஏ.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நிருபர்: ஜெகன், புதுக்கோட்டை.