கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. திருப்பத்தூரில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை, மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், சேலம்,கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி முதலே பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 7ஆம் தேதியன்று சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் தலைநகரமே வெள்ளக்காடானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த அதிகனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டமே உருக்குலைந்து போயுள்ளது. குமரி மாவட்டத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெள்ளக்காடான நகரங்கள் :
நேற்று மாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயார்:
நவம்பர் 18.11.2021 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உணவு, குடிநீர் அவசியம் அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் தேவையான காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செல்போன், வாட்ஸ் ஆப் எண்கள்:
மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைப்பேசி எண்களிலும் மற்றும் 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை :
விடிய விடிய விடாமல் கொட்டிய தொடர் கனமழை வெள்ளம் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு,அரியலூர், தஞ்சை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல காஞ்சிபுரம், சேலம், கடலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: TMail