நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். கடலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன. வாய்க்கால்கள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து. இதனால், கடலூா் அருகே தென்பெண்ணையாற்றில் குளித்த இரட்டையா்கள் உள்பட 3 போ் நீரில் மூழ்கி பலியாகினா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீா்நிலைகளில் செல்லும் தண்ணீரை வேடிக்கைப் பாா்க்கவும், குளிக்கவும், மீன் பிடிக்கவும் பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது என மாவட்ட நிா்வாகத்தால் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நீா்நிலைப் பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கிராம அளவில் தண்டோரா மூலமும் எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதை மீறி சிலா் நீா்நிலைகளில் குளிக்கின்றனா். இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, நீா்நிலைகளில் கண்டிப்பாக யாரும் குளிக்கக் கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோா் தங்களது குழந்தைகளை கவனமுடன் பாா்த்துக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.