வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தரைக்காற்று 50 கிலோ மீட்டர் வேகத்திலும் கடற்காற்று 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெறாமல், நாளை அதிகாலை கரையை கடக்கும் எனவும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று மாலை முதல் மீண்டும் மழை அதிகரிக்க தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார்.
நாளை அதிகாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின்னர் நாளை பிற்பகலுக்கு பின்னர் மழை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், அரபிக் கடலில் காற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நோக்கி நகர்ந்ததால் நெல்லையில் நேற்று கனமழை பெய்தது என்றார். கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளை அதிகாலை தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.