சீர்காழியில் கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்தி வந்த 140 மதுபாட்டில்களையும், 148 சாராய பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று அதிகாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 140 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார், மது பாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டநாதபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்குமாரசாமி மகன் ராஜா (வயது 28), சீர்காழி தென்பாதி வ.உ.சி. வடக்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சதீஷ்குமார் (20), சீர்காழி தென்பாதி எம்.ஆர். ராதா நகரை சேர்ந்த சிவகுருநாதன் மகன் வினோத் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல சீர்காழி ரெயில்வே ரோட்டில் நேற்று காலை வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சீர்காழி போலீசார் சோதனையிட்டனர். அதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சாராயம் 148 பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோ மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சங்கர் (26), அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Read Time:2 Minute, 37 Second