0 0
Read Time:2 Minute, 19 Second

வடகிழக்கு பருவ மழை கடலூர் மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழையால் 228 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளது. இதற்கிடையில் தென்பெண்ணை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து சென்றது.

அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரை தாண்டி வெள்ளம் சென்றது. இதனால் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் அனைத்தும் தாழங்குடாவில் வங்க கடலில் இணைந்தது. இதேபோல் கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதில் அதிக பட்சமாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை சென்றது. இந்த தண்ணீரும் தேவனாம்பட்டினம் முகத்துவாரம் வழியாக கடலில் வீணாக கலந்தது. நேற்று தென்பெண்ணை ஆற்றின் நீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 600 கனஅடியாக இருந்தது. இதேபோல் கெடிலத்தில் வினாடிக்கு 3650 கனஅடி நீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது. 

இந்த மழையால் தென்பெண்ணையாற்றில் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீரும், கெடிலம் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரும் வீணாக கடலில் கலந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இந்த ஆறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கொள்ளிடம், வெள்ளாறு வழியாகவும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %