மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மனு அளித்துள்ளனர் இது குறித்து தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறகலைஞர்கள் நலசங்க மாநில பொருளாளர் பாபு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுகொண்டிருக்கிறது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் வீடுதோறும் கல்வி திட்டம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிக்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் பிழைப்பு இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளுக்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும், நாகை கல்வி மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை பிரித்து தனி முதன்மை கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. உடன் சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், நாட்டுப்புறகலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் இருந்தனர்.