தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.இது தவிர கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு என ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 19-ந்தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணையாற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
இந்த வெள்ளப்பெருக்கால் கரைகளில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த தண்ணீர் இன்னும் வடியாத நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் தரைப்பாலங்கள் உடைந்து வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வயல் பகுதிக்குள் அனைத்தும் மண் மேடாக மாறி உள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் மழை வெள்ள சேத விவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து உள்ளனர். இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வடகிழக்கு பருவ மழையாலும், திடீர் வெள்ளப்பெருக்காலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால், ஆற்றங்கரைகள் என மாவட்டம் முழுவதும் 115 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தென்பெண்ணையாற்றங்கரையோரம் 31 இடங்களிலும், கெடிலம் ஆற்றங்கரையோரம் 15 இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடை பெற்று வருகிறது என்றார். இருப்பினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்பெண்ணையாற்றங்கரைகள் பல இடங்களில் பலப்படுத்தாமல் இருந்தது. இதன் காரணமாக இங்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Time:3 Minute, 8 Second