வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் தொழுதூரில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தொழுதூர் அணைக்கட்டுப்பகுதி உள்ளது. இந்த அணைக்கட்டுக்கு, பெரம்பலூர் மாவட்டம் கல்லாறு – சுவேதா நதி மற்றும் ஆத்தூரில் இருந்து வரும் வசிஷ்ட நதி, ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாகவும்; சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கன மழை பெய்து வருவதாலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வெல்லிங்டன் நீர்த்தேக்கம் நிரம்பி அதற்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், தற்போது தொழுதூர் அணையிலிருந்து நீர்வெளியேற்றம் அதிகப்படுத்தப்பட்டுத்துள்ளது.
இதனால் காலை 6 மணி நிலவரப்படி தொழுதூர் அணைக்கட்டு வினாடிக்கு 8,062 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனை (8,062 கன அடி நீரை) அப்படியே வெளியேற்றி வருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால், வெளியேற்றுப்படும் நீரின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புளளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வெள்ளாற்று இரு கரையோரம் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘அபாயத்தை அறியாமல் வெள்ளாற்றை கடக்க கூடாது, ஆற்றங்கரையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது, தடுப்பணை அருகே ஆபத்தான முறையில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது, ஆற்றில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க கூடாது’ போன்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையுள்ள பகுதியில் காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்தறையினர் கண்காணித்து வருகின்றனர்.