மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக்குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் பல்வேறு ரேஷன் கடைகளில் தொடர்ந்து கண்காணித்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த ஆய்வுகளின் பொழுது, ரேஷன் கடைகளுக்கு வருகின்ற பெரும்பாலான பொதுமக்கள் கொடுத்த புகார் என்பது சுத்தமான தரமான அரிசி கொடுக்கப்படவில்லை என்றும் தரமற்றதாக உண்பதற்கே தகுதியற்ற மோசமான துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் அரிசி உள்ளது என்பதே ஆகும்.
இதனை அடுத்து அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்காக அரசின் அரிசி அரைக்கும் ஆலையான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை சீர்காழி தாலுக்கா எருக்கூரில் ஆலை பகுதி 1 மற்றும் 2 செயல்பட்டு வருகிறது. அதனை கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் அலுவலக கட்டிடம் முதல் அரிசி ஆலை வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்ற புழுங்கல் அரிசி, பச்சரிசி அரைத்து கொடுக்கின்ற மிகப்பெரிய சேவை நிறுவனமான எருக்கூர் நவீன அரிசி அரைக்கும் ஆலையின் அனைத்துப் பகுதிகளையும் மயிலாடுதுறை மாவட்ட நுகர் பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக் குழு உறுப்பினரும்,சமூக ஆர்வலருமான அ. அப்பர்சுந்தரம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அரசு நவீன அரிசி ஆலையின் செயல்பாடுகள் குறித்து இயந்திரப் பிரிவு உதவி பொறியாளர் சுந்தரேசன் விரிவாக எடுத்துக் கூறினார்.
உட்புற சாலைகள் அத்தனையும் காணாமல் போய் சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. சுற்றுச் சுவர் முழுவதும் பாசி படிந்து பச்சை நிறமாக மாறி, கொடிகள் படர்ந்து, செடிகள் மண்டி கிடக்கின்றன.. அலுவலகக் கட்டிடம் பொலிவிழந்து வலுவிழந்து ஆங்காங்கே விரிசலுற்று புதிப்பிக்க படாமல் கட்டிடம் முழுமையும் இருக்கின்றது. அதனை அடுத்துள்ள தொழிலாளர்களின் ஓய்வறை, உணவரை, கழிவறைகள் சுகாதார சீர்கேட்டின் உச்சமாக உள்ளது.
நெல் அரவை மேற்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மேற்புறம் மழைநீர் உட்புகாமல் இருப்பதற்கான ஷெட் முழுமையாக அமைக்க பெறாததால் நெல் மழையில் நனையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியாற்றுகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதிக அளவு தூசு வெளியேறி வருகின்ற இடத்தில் நெல் மூட்டைகளை அவிழ்த்து கொட்டுகின்ற தொழிலாளர்கள் முகக் கவசம் இன்றியும் பாதுகாப்பு உபகரணங்கள்அணியாமல் காணப்படுவது அவர்களுக்கு நிச்சயம் நுரையீரல் நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நெல் அரவை செய்த பிறகு அதிலிருந்து பிரித்து அகற்றப்படுகின்ற தூசு மற்றும் தவுடு மூட்டை மூட்டையாக மலை போல குவிக்கப்பட்டு விட்டதால், கடந்த பல மாதங்களாக தேங்கிய தவுடு முட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது. மலைபோல குவிக்கப்பட்ட தவிடு முட்டைகள் டெண்டர் விடப்பட்டு வெளியேற்ற படாத காரணத்தினால் அந்த மூட்டைகளுக்கு கீழே பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் மீது மூட்டை சரிந்து விழும் அபாயமும், அதனால் தொழிலாளர் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 100 டன் அளவிற்கு நெல் அரவை செய்யவேண்டிய இந்த ஆலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சுமார் 40 டன் மட்டுமே செய்யவேண்டிய நிலையும் உள்ளது. சாலை மற்றும் உட்புறம் உள்ள பகுதிகள் அனைத்து இடங்களிலும் தேவையற்ற செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. இரவுநேரங்களில் உரிய மின் விளக்குகள் வசதியும் இல்லாததால் பாம்புகள் தேள் நட்டுவாகௌலி போன்ற விஷ ஜந்துக்களின் தாக்குதலுக்கு தொழிலாளர்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் மொத்தமாக தொழிலாளர்கள்,அலுவலர்கள், மூன்று ஷிப்ட் பணிக்கும் சேர்த்து சுமார் 150நபர்கள் மற்றும் லாரி ஓட்டுநர் உதவியாளர்கள் 150நபர்கள் தங்கள் பணி நிறைவுற்று முற்றிலுமாக குளிப்பதற்கு ஏற்ப தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அவர்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கூட முறையான ஏற்பாடு நிழலகம் இல்லாததால் அவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன அரிசி ஆலைகள் ஒட்டுமொத்தமாகவே பராமரிப்பின்றி இருப்பதால் உடனடியாக நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தனி கவனம் செலுத்தி அடிக்கடி நேரில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதுநிலை மண்டல மேலாளர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் எருக்கூர் முகம்மதுபுஹாரி, கலைத்தாய் அறக்கட்டளை கிங்பைசல் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: அ.அப்பர்சுந்தரம்