வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் முக்கிய ஏரிகளில் ஒன்றாக இருப்பது குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி.தொடர் மழையால் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீர் மற்றும் மழைநீர் பரவனாறு மற்றும் செங்கால் ஓடை வழியாக ஏரிக்கு அதிகப்படியான தண்ணீர் வரத்து இருந்தது. அதாவது நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 900 கனஅடி என்கிற அளவில் தண்ணீர் வரத்து இருந்தது.
இதனால் ஏரி நேற்று முழு கொள்ளளவான 6.4 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து வினாடிக்கு 5200 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆலப்பாக்கம் வழியாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் ஏரியை சுற்றி உள்ள நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நெல் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் மூழ்கி கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொள்ளிடம் வடிநில கோட்டம் சிதம்பரம் கட்டுப்பாட்டில் 18 ஏரிகளும், விருத்தாசலம் வெள்ளாறு வடி நில கோட்டத்தில் 210 ஏரிகளும் உள்ளன.இந்த ஏரிகளில் கொள்ளிடம் வடி நில கோட்டத்தில் 4 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்டத்தில் 191 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் இந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது தவிர 17 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 8 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலும், 7 ஏரிகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதமும், 2 ஏரிகள் 25 ச தவீதமும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த ஏரிகளும் மேலும் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
Read Time:2 Minute, 51 Second