மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆர்.மகேந்திரன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல சிகிச்சை இருவார விழா கடந்த 21-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத குடும்ப நல சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுடைய ஆண்கள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றார்.
இதில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம், படுக்கை விரிப்புகள், கொசு வலை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நிர்வாக அலுவலர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.