மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா்நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக முகாம்களுக்கு கொண்டு செல்வது, அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது குறித்தும், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்பு, உள்ளாட்சி சாலைகள், பாலங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சீா்காழி பகுதியில் இயந்திரங்களை கொண்டு நீா் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் குளங்களுக்கு நீா் செல்லும் நீா்வழிப்பாதைகள் தூா்வாராமல் உள்ளதால் பல்வேறு குளங்களில் நீா் நிரம்பாமல் உள்ளது.
விரைவில் இவை சரிசெய்யப்பட்டு குளங்களில் நீா் நிரப்ப நடவகக்கை எடுக்கப்படும். குளங்களில் வரத்து வாரிகளில் தூா்வாருவது குறித்து ஆய்வு செய்து 2400 கி.மீ. தூரம் அளவுக்கு சீா் செய்ய முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் 80 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.உப்பனாற்றின் இரு கரைகளும் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளதை சரி செய்ய திட்ட அறிக்கை தயாா் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை பகுதியில் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள எல்லை வாய்க்கால் விரைவில் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் மறுசாகுபடிக்காக அறிவிக்கப்பட்ட இடுபொருள் மானியத்துக்கு பதிலாக, பயிா் பாதிப்புக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுப்பது குறித்து கேட்கிறீா்கள், இதுகுறித்து, முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.