மயிலாடுதுறை மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பள்ளி மற்றும் கடைகளில் ஓட்டப்பட்டது.
மயிலாடுதுறை நகர் பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போதைப் பொருட்கள், புகையிலை மற்றும் மணல் திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணுடன் கூடிய விழிப்புணர்வு பதாதைகள் பள்ளியின் நுழைவுவாயில் மற்றும் வளாகங்களில் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டது. மேலும் பள்ளிகளை சுற்றி நூறு மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி அருகில் உள்ள கடைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவுறுத்தினார். கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியும் படி காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், காவல்துறை ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.