ஸ்ரீமுஷ்ணம் கஸ்பா தெரு அருகில் உள்ள பாப்பான்குளம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் மணிலா, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த காரணத்தால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. மழை நின்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் விளைநிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடியாமல் அப்படியே நிற்கிறது.இதனால் பயிர்கள் அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள வடிகால் ஓடையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடியாமல் நிற்கிறது. தற்போது சுமார் 40 ஏககர் நிலப் பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநின்றதும் தண்ணீரை வடியவைத்து விட்டு, சேதமடைந்த பயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தோம். ஆனால் தண்ணீர் வடியாமல் இருப்பதால் எங்களது பயிர்கள் தற்போது முழுமையாக அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Read Time:2 Minute, 15 Second