கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதி வழங்கிட வேண்டும். மாத ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளிக்கு 60 வயதுக்கு முன்பே கணவர் இறந்தால், விதவை பென்ஷன் வழங்க வேண்டும்மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3-ந் தேதி (அதாவது நேற்று) நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கட்டுமான தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கடலூர் அண்ணா பாலம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) யாஸ்மின் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், துணை தலைவர்கள் ஜெயசீலன், மனோரஞ்சிதம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் கருப்பையன் உள்ளிட்ட 283 பெண்கள் உள்பட மொத்தம் 380 பேரை கைது செய்து, பஸ்சில் ஏற்றிச் சென்று திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் கடலூர் நகரில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Read Time:2 Minute, 40 Second