கொள்ளிடம் அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டநபரை பெண் காவலர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்தில் கடந்த 2 நாட்களாக முதலை ஒன்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், கொள்ளிடம் காவல் நிலையத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, முதலையை பிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார்.
அப்போது, அவரிடம் பேசியபெண் காவலர் ஒருவர், அவரைதகாத வார்த்தைகளால் பேசியதுடன், மீண்டும் போன் செய்து தொந்தரவு செய்தால், ஸ்டேஷனுக்கு தூக்கிக் கொண்டு வந்து தொலைத்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளதாக அதிர்ச்சிஅடைந்த ஒரு நபர், இதுகுறித்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு, முதலையை பிடிக்க வனத்துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு சென்று முதலையை பிடித்துச் சென்றனர்.
இதனிடையே, முதலையை பிடிக்க உதவி கேட்டவரிடம் பெண் காவலர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சீர்காழி டிஎஸ்பி லாமேக், சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி லாமேக்கை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘முதலையை பிடிக்க உதவி கேட்ட நபர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்வதற்கு முன்பு, தொடர்ந்து 3 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அப்போது, காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலரிடம் தொலைபேசியில் பேசிய அந்த நபர், கொள்ளிடத்தில் உள்ள ஒரு தெருவின் பெயரைக் கூறி, அங்கு விபத்தில் அடிப்பட்டு ஒருவர்உயிருக்கு போராடுவதாக கூறி இருக்கிறார்.
உடனே அந்த பெண் காவலர், சம்பவ இடத்துக்கு காவலர்களை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், அங்கு விபத்து நடந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. இதனால் அந்த பெண்காவலர் கோபத்தில் இருந்தபோதுதான், முதலை தொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதுவும் பொய்யாகத்தான் இருக்கும்என்ற நினைப்பில் அவர் அப்படிபேசிவிட்டார். சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தி உள்ளேன்’’ என்றார்.
source: hindutamil