கடலூர் செம்மண்டலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-இந்திய அரசியல் சாசனச்சட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு, குறிப்பாக பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டது இச்சட்டம். ஒவ்வொரு பணியிடத்தின் உரிமையாளரும் பெண்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்வதில் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்யவும், வீட்டிலும், வெளியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க அனைவரும் முன் வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.
தொடர்ந்து பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “பணியிடத்தில் என்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்களை கண்ணியத்துடனும், எனக்கு சமமாகவும் நடத்துவேன், எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பாலியல் துன்புறுத்தல்கள் சார்ந்த நடத்தைகளை மேற்கொள்ளமாட்டேன் என்றும்,மேலும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை சட்டப்படி எந்த ஒரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ” என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.கருத்தரங்கில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொறுப்பு) செல்வி, கண்காணிப்பாளர் சுமதி, உளவியல் ஆலோசகர் மனோகர், வக்கீல் வத்சலா, பாதுகாப்பு அலுவலர் ஆண்டாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Read Time:2 Minute, 53 Second