கடலூர் அருகே கேப்பர்மலையில் அரசு காசநோய் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆஸ்பத்திரிக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மருந்தகங்களில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதா? என்றும், ஆய்வகங்களில் உள்ள பரிசோதனை உபகரணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்றும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதையடுத்து ஆஸ்பத்திரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு வார்டுகளை ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார். ஆஸ்பத்திரி வளாகங்கள் மற்றும் வார்டுகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தொற்று பரவாத வண்ணம் தூய்மையாக வைத்திருக்க ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது இணை இயக்குனர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, கோட்டாட்சியர் அதியமான்கவியரசு, காசநோய் டாக்டர் (அரசு தலைமை ஆஸ்பத்திரி) கருணாகரன், காசநோய் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Read Time:2 Minute, 2 Second