0 0
Read Time:3 Minute, 54 Second

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட  நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீர் நிலை ஓரத்தில்  163 வீடுகளை கட்டி ஏராளமானவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள வேண்டும் கூறி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை அகற்றிக்கொள்ள காலஅவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன்படி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் வருகிற 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று சிதம்பரம்  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் நகர், நேரு நகர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு முத்து தலைமையில் ஒன்று திரண்டனர்.

 பின்னர் அவர்கள் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள், இந்த நிலையில் எங்களது வீடுகள் நீர், நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதனை நீங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களது வீடுகளை அகற்றக்கூடாது. மேலும்  எங்களது வாழ்வாதாரத்திற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூசா, நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் திருவரசு, உள்பட அரசியல் கட்சியினா் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஆனந்த், சிதம்பர நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோட்டாட்சியர் ரவி கூறுகையில், சிதம்பரம் அருகே கூடுவேலி கிராமத்தில் காலிமனை உள்ளது. அங்கு உங்களுக்கு இடம் தருகிறோம். எனவே அங்கு செல்லுங்கள் என்றார். ஆனால் பொதுமக்கள் அனைவரும் சிதம்பரம் நகர பகுதியிலேயே இடங்கள் உள்ளது. எனவே அந்த இடங்களை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்றனர். இதைகேட்ட கோட்டாட்சியர் ரவி, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %