பிரதமர் மோடியின் கனிவுப்பார்வை காவேரியிலும் விழுமா?. சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !
அவர் விடுத்துள்ள வேண்டுகோள் பின்வருமா: 2014இல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் புனித நதியாக போற்றப்படுகின்ற கங்கையை தூய்மைப்படுத்தி புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்வதற்காக 2500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கென தனி அமைச்சராக பெண்துறவி உமாபாரதி நியமிக்கப்பட்டார்.
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்துக்களின் புனித ஸ்தலங்களான காசி புனித படுத்தப்பட்டது. தற்பொழுது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ள காட்சியை கண்டு வடஇந்திய மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதனைப் போல கங்கையின் பாவத்தையே நீக்கிய பெருமைக்குரிய காவேரி நதியின் தூய்மையையும் புனிதத்தையும் போற்றுகின்ற வகையில் பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வை காவிரியின் மீது விழ வேண்டும் என்பது தென்னிந்தியாவில் உள்ள அனைவரின் விருப்பமாகும்.
2017இல் காவேரி மகா புஷ்கர விழா கண்ட மயிலாடுதுறை, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் விழா காணும் கும்பகோணம், கர்நாடக சங்கீத பிதாமகர் தியாகராஜ பாகவதரின் திருவையாறு, அகண்ட காவேரி ஸ்ரீரங்கம், மேட்டூர், மஞ்சள்நகர் ஈரோடு, பவானி கூடுதுறை, ஒக்கேனக்கல் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்று அகன்ற காவேரிக்கு தலைக்காவிரி முதல் கடை காவிரி பூம்புகார் வரை அதன் கரையில் பல்வேறு பாடல்பெற்ற தொண்மையான சிவாலயங்கள் பெருமை தூய்மையை பாதுகாக்கவும் கங்கையைப் போல புதுப்பிக்கவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கனிவு பார்வை காவேரியின் மீது விழ வேண்டும். கங்கைக்கு கொடுத்ததை போல முக்கியத்துவம் கொடுத்து அள்ளிக் கொடுக்கவில்லை என்றாலும் கில்லியாவது கொடுத்து காவிரியின் பழம்பெருமையை நிலைநாட்டிட பிரதமர் முன்வரவேண்டும்.
அதற்கான கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக எம்பிக்கள் பிரதமருக்கு முன்வைக்க வேண்டும். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், கவர்னர்கள் இல.கணேசன், தமிழிசைசௌந்தர்ராஜன் ஆகியோரின் முயற்சிகள் மிகவும் அவசியமாகும். இது தமிழ்நாட்டிற்கு செய்யும் பெரும் சேவையாக என்றும் போற்றப்படும்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.