0 0
Read Time:4 Minute, 12 Second

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்க வகை செய்யும் வங்கிகள் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் அமலாக்கப்பட உள்ளது. மேலும் 2 அரசுடைமை வங்கிகளை தனியாருக்கு மொத்தமாக தாரைவார்க்கும் அபாயமும் உள்ளதால், இதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் 17-ந் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

ஆர்ப்பாட்டம்:

இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் நேற்று மூடப்பட்டே இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்பட்டது. இந்த நிலையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூர் பாரதி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.பி.இ.ஏ. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வங்கி அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பலராமன், கண்ணன், ஓய்வூதியர் சங்க தலைவர் ரமணி, திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் செந்தில்குமார், கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க செயலாளர் வைத்திலிங்கம், சுகுமார், என்.சி.பி.இ. வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் நெப்போலியன், நெடுமாறன், வங்கி ஊழியர் சம்மேளனத்தின் ஹேமந்த், வங்கி அதிகாரிகள் சங்கம் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

பணப்பரிவர்த்தனை பாதிப்பு:

இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட 190 கிளை வங்கிகளில் பணியாற்றி வரும் 750 வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை என மொத்தம் ரூ.500 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %