0 0
Read Time:3 Minute, 6 Second

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக 48 ஆண்டுகளுக்கு மேலாக அவரது நிழல்போல வலம் வந்தவர் சண்முகநாதன். கருணாநிதி மறைவுக்குப் பிறகு வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

சண்முகநாதனின் உடல்நிலை மோசமடையவே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் சண்முகநாதன் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

கருணாநிதிக்கும் சண்முகநாதனுக்குமான பந்தம் 50 ஆண்டுகாலம் நீண்டது. காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றிய சண்முகநாதன், 1969 ஆம் ஆண்டு கருணாநிதியின் உதவியாளராக சேர்ந்தார். நாள்தோறும் கோபாலபுரம் இல்லத்தில் காலை 7 மணிக்கெல்லாம் கருணாநிதியின் அறிக்கைகளை தட்டச்சு செய்வதில் இருந்து சண்முகநாதனின் பணி தொடங்கிவிடும். இரவு அனைத்து பணிகளும் முடிந்து கருணாநிதி உறங்கச்சென்ற பிறகுதான் சண்முகநாதனின் பணியும் முடியும்.

கருணாநிதியின் ஒவ்வொரு அசைவுகளையும் புரிந்துகொண்டு அவரது எண்ணங்களுக்கு ஏற்ப செயல்பட்டவர். கருணாநிதி உடல்நலக்குறைவால் அரசியலில் செயல்படாமல் இருந்த சமயத்திலும் அன்றாடம் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துவிடுவார்.

கருணாநிதியுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலில் பதிவு செய்த சண்முகநாதன், “என்னுடைய இந்தப் பிறவி தலைவருக்கானதுதான். அவர் இல்லாமல் நான் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். சண்முகநாதன் குறித்து கருணாநிதியே, “சண்முகநாதன் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்பதைவிட, எனது அகத்திலே இருந்து பணியாற்றுபவர்” என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இப்படியாக 50 ஆண்டுகள் கருணாநிதியின் நிழலாகவே வலம் வந்த சண்முகநாதன் மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %