இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் மாநில தலைவர் ராம.நிரஞ்சன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் மெய்யழகன், செயலாளர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதீனங்களின் கட்டுப்பாடுகளில் உள்ள கோவில்கள் அனைத்திலும் குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில், தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோவில், திருவாளப்புத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் கோவில், சோழன்பேட்டை தான்தோன்றீஸ்வரர் கோவில், திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.