தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு முதன் முதலில் ஒமிக்ரான் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மூவரும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த மூவரும் மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பழக்கூடை வழங்கி நலம் விசாரித்தனர்.
பின்னர் கிங்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 31 ஆகக் குறைந்துள்ளது எனக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.