மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் புதிய ரேஷன்கடை அமைக்கக் கோரி சாலை மறியல். அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொள்ளிடம் அருகே கோதண்டபுரத்தில் புதிய ரேஷன்கடை அமைக்கக் கோரி சாலை மறியல் நடந்தது. இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரேஷன் கடை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம், நல்லூர், கோதண்டபுரம் வழியாக புதுப்பட்டினம் மற்றும் பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் புளியந்துறை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையை 2-ஆக பிரித்து கோதண்டபுரத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும். ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புளியந்துறை மற்றும் கோதண்டபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் புளியந்துறையில் சாலையின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை:
பின்னர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் சண்முகம், வட்ட வழங்கல் அலுவலர் சபீதாராணி, புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் தரமான அரிசி வழங்கப்படும் என்றும் புதிதாக கோதண்டபுரத்தில் ரேஷன் கடை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் கொள்ளிடத்திலிருந்து புளியந்துறை வழியாக புதுப்பட்டினம் மற்றும் பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செல்லமுடியாமல் 3 மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.