மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முருகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
ரஜினி: பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான அண்ணா கல்யாண மண்டபத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று கூறினார்.
சாந்தி: அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். ஆக்கூர் தெற்கு தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். ஆக்கூர் திருவள்ளுவர் சாலையை புதிதாக அமைத்து கொடுத்ததற்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மோகன்தாஸ்: கீழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவசர சிகிச்சை பெற ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
சக்கரபாணி: செம்பனார்கோயில் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்த இறைச்சி கழிவுகள் மேலப்பாதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் கொட்டுவதை தடுக்க வேண்டும். அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தரமான சத்துமாவு வழங்க வேண்டும்.
கிருபாவதி சிவகுமார்: 2 ஆண்டுகளாக பொறையாரிலிருந்து நல்லாடைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் அந்த பேருந்து இயக்க வேண்டும். நல்லாடை பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வேண்டும்.
சுப்பிரமணியன்: கஞ்சாநகரம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும்.
செல்வம்: காட்டுச்சேரி ஊராட்சியில் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள், மழையால் சேதமடைந்த சாலைகள், அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்கவும் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பொறையாறு- நல்லாடை இடையே அரசு பேருந்து மீண்டும் இயக்கப்படும். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் துறைவாரியாக எடுத்துச்சென்று அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக், ஒன்றிய செயற்பொறியாளர்கள் சோமசுந்தரம், முத்துக்குமார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.