மயிலாடுதுறையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அதன் தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெண்மணி அழகன், துணை செயலாளர் ஆதிசெல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்று பேசினார்.
இதில் அமைப்பின் பொருளாளரும், தமிழக மனித உரிமைக் கட்சியின் நிறுவன தலைவருமான ராமதாஸ், அமைப்பின் செயலாளரும், விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல செயலாளருமான வக்கீல் வேலு குணவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கிட குடும்ப வருமான வரம்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை தனி கவனம் செலுத்தி அனைத்து வழக்குகளிலும் முழுமையான வெற்றி பெற அரசு ஆவன செய்ய வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம்:
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உடனே அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டி அதன் வருவாயில் இருந்து சமூக மக்களுக்கு உதவிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவின் மாநில செயலாளர் பூவாலை மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் ஜெகன்.சாமிகண்ணு நன்றி கூறினார்.