மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!
மயிலாடுதுறை நகரத்தில் பள்ளி மாணவர்கள் பனங்கிழங்கு விற்பனை செய்துவருவதை நகர வீதிகளில் காணமுடிகின்றது. தமிழக அரசு படிக்கின்ற வயதில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதை நாம் அறிவோம்.
அனைவருக்கும் கல்வித் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மாலை நேர வகுப்புகள், தொலைதூர கல்வி திட்டம் என்றும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த பொழுதிலும் குடும்ப வருமை காரணமாக பள்ளிக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு வேலைகளுக்குச் செல்வதையும், தலையில் சுமந்து பழங்கள், காய்கறிகள், கீரை, பூ வகைகள், வெள்ளரி, பனங்கிழங்கு, இலந்தை,நாகப்பழம் போன்ற கிராமத்து பகுதிகளில் விளைந்த வேளாண் பொருட்களை விற்பதை செய்வதை காணமுடிகின்றது.
குறிப்பாக தற்பொழுது திருமுல்லைவாசல், திருக்கடையூர், சீர்காழி போன்ற பகுதிகளில் அதிகமாக விளைந்துள்ள பனங்கிழங்குகளை வேக வைத்து கட்டு கட்டாக தலைகளில் சுமந்து கூடைகளில் எடுத்து வந்து விற்பனை செய்வது ஆங்காங்கே காணமுடிகின்றது. மயிலாடுதுறை பேருந்து நிலையம், பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகா தான தெரு போன்ற வீதிகளில் பள்ளியில் படிக்க வேண்டிய மாணவர்கள் பனங்கிழங்கை விற்பனை செய்வது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கின்றது.
அப்படி விற்பனை செய்யும் மாணவர்களிடம் கேட்கின்ற பொழுது, தாங்கள் படிப்பதாகவும் பொய் சொல்லுகின்றார்கள். பள்ளி நடக்கும் நாட்களில் விற்பனை ஏன் வருகிறாய் என்றால் பதில் கூறாமல் செல்கிறார்கள். கல்வித்துறை அதிகாரிகளும், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் அப்படிப்பட்ட பள்ளி படிக்கும் மாணவர்கள் விற்பனைக்கு வருவதை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி கல்வியை தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-அ.அப்பர்சுந்தரம்