’’கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார். முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள்’’.
கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாஜக மாவட்டத்தலைவர் சதிஸ்குமார், குடந்தை வழக்கறிஞர் சங்கத்தலைவர் மா.இராஜசேகர், பாமக மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், நாம் தமிழர் கட்சி மாவட்டத்தலைவர் ராஜ்குமார், வன்னியர் சங்க மாவட்டசெயலாளர் மதி.விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சிபொறுப்பாளர் குடந்தை ஜாபர் வரவேற்றார். இக்கூட்டத்தில், உழவர் பேரியக்க மாநிலத்தலைவர் கோஆலயமணி, பாஜக மாவட்டசெயலாளர் பொன்ராஜ்தேவர்,
குடந்தை வர்த்த சங்கத் தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் கவிஞர்.அய்யப்பன், இந்துமக்கள்கட்சி மாநில பொறுப்பாளர் குருமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இறுதியில் ரமேஷ் நன்றி கூறினார்.
கூட்டத்தின், திமுக அரசு அமைந்தவுடன் நூறு நாட்களில் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிப்படும் என உறுதியளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்டும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வருகின்ற 5ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெறவுள்ளதால் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெறவுள்ள தமிழக அரசு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது கும்பகோணம், திருவிடைமருதூர் பாபநாசம் தாலுகாவில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணி நடத்துவது, மார்ச் மாதம் தமிழ்நாடு தலைமை செயலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும், அரசு கொறடா கோவி.செழியன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் ஆகியோர்களின் இல்லங்கள், அலுவலங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் மற்றும் பல கட்ட தொடர் போராட்டங்கள் செய்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து போராட்ட குழுவினர் கூறுகையில்,கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்போம் என தேர்தல் பரப்புரையின் போது, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றும், கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டார். முதல்வரை நம்பி வாக்களித்ததால், அனைத்து மக்களும் ஏமாளியாகி விட்டார்கள். கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய போது, தற்போதைய முதல்வர், அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று எண்ணத்தில், எங்களுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் பதவிக்கு வந்தவுடன், அதிமுக ஆட்சி போல், எங்களை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றார். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கும் வரை போராட்டங்கள் தொடரும். முதல்வர் அறிவிக்கா விட்டால், போராட்டங்கள் வலு பெற்று, கும்பகோணம், திருவிடைமருதுார், பாபநாசம் பகுதிகளில் முழுவதும் ஸதம்பிக்கும். எனவே, தமிழக முதல்வர், கும்பகோணம் மக்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
Source:ABP