0 0
Read Time:8 Minute, 8 Second

ஒரு வயது தொடங்கிய பிறகுதான் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க வேண்டும். பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும். இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும். குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு. குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது. எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது. தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும். நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம். இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது. இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமாகும். நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும். அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம். பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது.

இறால், நண்டு போன்ற உணவுகளை தாய்க்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது. அதுவும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது. ஏனெனில் அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்.

காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு காப்பி, டீ கொடுத்தாலும் மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் உணவு முறை மிக முக்கியமானது. குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். அதிகவேகமான வளர்ச்சி முதல் 2-3 வருடங்களில் இருப்பதால் அது இன்னும் முக்கியத்துவமானது. மேலும் இந்த வயதில் குழந்தைகள் பெற்றோரை நம்பி இருப்பதால் இது முக்கியத்துவமானது.

முதல் ஆறு மாதம்

முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தவிர மற்ற திர, திடவ உணவுகள் முதல் ஆறு மாதத்திற்கு கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. குழந்தை நோய் வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது.

குழந்தை தாய்ப்பால் சப்பி குடிக்க குடிக்கத் தான் தாய்ப்பாலே உற்பத்தி ஆகும். தாய்ப்பால் இல்லை என தவறாக கற்பனை செய்து குழந்தைக்கு தாய்பால் கொடுக்காமல் நிறுத்தினால் தாய்ப்பால் உற்பத்தி ஆவதும் குறைந்துவிடும்.

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை

ஆறு மாதம் முடிந்த பின்னும் தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இனி சிறிது சிறிதாக மற்ற ஆகாரங்களும் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஆகாரங்களாக ஆரம்பிக்க வேண்டும். அதாவது ஒரு உணவு ஆரம்பித்து ஒரு வாரமாவது ஆன பின் தான் அடுத்த உணவை கொடுத்து பழக்க வேண்டும். மாதுளை, ஆரஞ்சு சாறு கொடுக்கலாம். ஆப்பிளை மிக்சியில் அடித்து கொடுக்கலாம்.

ஆப்பிளை வேக வைத்து கொடுத்தால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய் விடும். மசித்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக் கிழங்கு, கேரட்) கொடுக்கலாம். வாழைப்பழம், சப்போட்டா மசித்து கொடுக்கலாம். ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் தாய் தனது கையை சோப்பு போட்டு கழுவி விட்டு தான் உணவு ஊட்ட வேண்டும்.

எட்டு மாதத்திற்கு பின் முட்டை, பருப்பு சாதம், கீரை சாதம், நெய் சாதம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.

பாட்டிலில் தண்ணீரை அடைத்து ரப்பர் மூலம் கொடுக்காமல், சிறிய கரண்டி மூலமோ அல்லது டம்ளர் மூலமோ தண்ணீர் கொடுத்து பழக்குவது நல்லது.

ஒரு வயதுக்கு மேல்

குழந்தை விரும்பும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே இனி கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலாம். தாய் தனது கையையும், குழந்தையின் கையையும் சோப்பு போட்டு கழுவிய பின்பே உணவு கொடுக்க வேண்டும். இந்த வயதில் தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்க வேண்டும் முடிந்த வரை ஊட்டக் கூடாது.

ரண்டு வயதுக்கு மேல்

பசும் பால் கொடுத்தால் தண்ணீர் சேர்க்காத பாலே கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். நாம் சாப்பிடுவது போல் முட்டை, பழங்கள் உணவில் சேர்க்க வேண்டும். சாப்பிடு வதற்கு முன் கைகளை சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிட பழக்க வேண்டும்.

எந்த உணவையும் தயார் செய்த இரண்டு மணி நேரத்தில் கொடுத்து விட வேண்டும். உணவுகளை பிரிஜ்ஜில் வைத்தால் ஒரு நாளைக்கு மேல் வைக்கக்கூடாது.

பசும் பால், பழச்சாறு கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்பது கட்டுக்கதை. இது தவறு பால் மற்றும் பழங்களால் சளி ஏற்படுவதில்லை.

மூன்று வயதுக்கு கீழ் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மசிக்காத கேரட், வருத்த பயறு, நிலக்கடலை வகைகள், பயறு, பருப்பு வகைகள், பாப்கார்ன், வலுவான சாக்லெட் துண்டுகள், முழு திராட்சைப் பழங்கள். ஏனெனில் இவை குழந்தைகள் சாப்பிடும் போது புரையேறி தொண்டை மூச் சுக்குழாயை அடைக்க வாய்ப்பு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %