மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, நாணல்படுகை, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக இந்த பகுதிகளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டது. அந்த பயிர்களை உரம், மருந்து தெளித்து விவசாயிகள் காப்பாற்றினர்.
இந்நிலையில் இன்னும் 10 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன் பெய்த மழையில் சாய்ந்து மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. தண்ணீர் வடியாததால் தொடர்ந்து நீரில் மூழ்கி இருந்த 5,000 ஏக்கர் சம்பா தற்போது முளைக்க தொடங்கியது. இனி அந்த பயிர்களை அறுவடை செய்தாலும், கூலிக்கு கூட தேறாது. தங்களுக்கு உரிய இழப்பீடும், முழு காப்பீடு தொகையையும் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம், உம்பளச்சேரி, மகாராஜபுரம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதுவரை தண்ணீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்க ஆரம்பித்தது. இதனால் விவசாயிகள், கூலித்தொழிலாளிகளை கொண்டு முட்டியளவு தண்ணீரில் மிதக்கும் நெல்மணிகளை அறுவடை செய்கின்றனர். வயல்களில் இருந்து மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: ராஜா, கொள்ளிடம்