ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ..
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு 75% அரசாணைகள் வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவிக்கே உரிய சான்றாண்மையை தமது உரையில் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
ஆளுநரின் பாராட்டு, அமைச்சரவையையும், பொதுமக்களையும் சேரும் எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும், நீட் விலக்கு விவகாரத்தில் முழுமையான ஆதரவு அளிப்பதாக கூறிய அதிமுகவுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
திமுக அரசு பொறுப்பேற்றபின் கடந்த 6 மாதங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு 75% அரசாணைகள் வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அம்மா மினி கிளினுக்குகள் மூடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.