மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளத்தில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் குளம் ஒன்று உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத அந்த குளத்தில் உள்ள தண்ணீரில் நேற்று மாலை அரிசி மூட்டைகள் கிடப்பதை கண்ட ஒருவர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம மக்கள் அங்கு சென்று குளத்தில் கிடந்த அரிசி மூட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் விசாரணை:
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். குளத்தில் மொத்தம் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தன.
இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் ரேஷன் கடையில் இருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு உள்ளதா? அல்லது வேறு யாராவது அங்கு வந்து அரிசி மூட்டைகளை தண்ணீரில் வீசி சென்றார்களா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு:
கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தரமற்ற அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதாக புகார் எழுந்து பல போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள குளத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.